கஞ்சா வழக்கு தொடர்பான இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்கு பின் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தேனியில் காரில் 409 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்பட மூவர் மீது தேனி பழனி செட்டி பட்டி போலீசார் வழக்குப் பதிந்து அவரது உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க தேனி போலீசார் நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்து மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி 2 நாள் காவலில் எடுத்த தேனி போலீசார் பழனி செட்டி பட்டி காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன், சுகுமாரன் தலைமையில் தேனி காவல் ஆய்வாளர் உதயகுமாரின் விசாரணைக்கு பின் மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தற்போது பழனிசெட்டிபட்டியில் இருந்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment