ஆண்டிபட்டி அருகே பழைய கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கு பணிகள் வழங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சிகளில் உள்ள பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ,அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மத்திய மாநில அரசுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் உறுப்பினர்களுக்கு பணிகள் வழங்கி அவருக்கு சம்பளம் வழங்கி வருகிறது .இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியம் பழைய கோட்டை ஊராட்சியில் பயனாளிகளுக்கு பணிகள் வழங்காமல், இயந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பண்ணை குட்டை அமைத்தல் ,ஊரணி, குளங்கள் தூர்வாருதல்,குளங்களுக்கு கரை அமைப்பது போன்ற பணிகளில் அப்பகுதியில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவு பெற்று, அதனை தவறாக பயன்படுத்தி, இயந்திரங்கள் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் . இதன் மூலம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு முறையாக உறுப்பினர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment