ஆண்டிபட்டி அருகே ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக பொதுமக்கள் வாக்குவாதம் .
போராட்டத்தில் ஈடுபட்ட 16 கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது .
ஆண்டிபட்டி , நவ. 7 -
தேனிமாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி பகுதியில் பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட 6 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கோதை ஊரணியின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டுமென,
பொதுமக்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து
நேற்று முன்தினம் ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் வினிதா, வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜு, இந்து சமய நலத்துறை தாசில்தார் மற்றும் காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்திருந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான ஆண்கள் கழிப்பறை கட்டிடத்தை அகற்றும்போது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் என
ஏராளமானோர் ஜேசிபி இயந்திரத்தை மறித்தும்
போலீசார் வாகனத்தை மறித்தும் சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகளுடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் மூன்றுமாத கால அவகாசம் கேட்டனர்.
நீங்கள் நீதிமன்றம் சென்று சீராய்வு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்று வந்தால் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்துவோம்.
இல்லையென்றால் கண்டிப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற சக்கம்பட்டிக்கு வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி கோசங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 கம்யூனிஸ்ட் கட்சியினரை கைதுசெய்த போலீசார் தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து கோதை ஊரணி பகுதியில் உள்ள ஆறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும்,
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழு வீச்சில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருவதும்,
ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment