ஆண்டிபட்டி பேரூராட்சியில் பருவ மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
ஆண்டிபட்டி ,டிச.14 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பேரூராட்சியில் பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆண்டிபட்டி நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பகல் - இரவு என இடைவிடாது தொடர்ந்து மழை நீடித்து பெய்து வருகிறது.
இந்நிலையில் மழையை எதிர்கொள்ளும் விதமாக பேரூராட்சியின் சார்பில் மணல் மூட்டைகள் , கடப்பாரை ,மண்வெட்டி, மரக்கம்புகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய ஓடைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் உள்ள இடங்களில் பணியாளர்கள் எந்த நேரத்திலும் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பணியாற்ற தயார் நிலையில் இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர் . வெள்ள தடுப்பு கருவிகளை ஒழுங்குபடுத்தி தயார் நிலையில் வைத்து, தற்போது ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப் பணிகளில் செயல் அலுவலர் சுருளி வேல் ,ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா மற்றும் சுகாதார ஆய்வாளர் கணேசன் ,தலைமை கணக்காளர் ஜியோ கான் மற்றும் பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் மழை பெய்யும் நேரங்களில் மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அடியிலோ நிற்க வேண்டாம் என்றும் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment