150 டிப்பர் லாரிகளுடன் ஊர்வலமாக வந்த உரிமையாளர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

150 டிப்பர் லாரிகளுடன் ஊர்வலமாக வந்த உரிமையாளர்கள்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 150 டிப்பர் லாரிகளுடன் உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தலை தடுக்கக்கோரி அவர்கள் மனு கொடுத்தனர்.


தேனி மாவட்டத்தில் சுமார் 300 டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கக்கோரியும், கனிம வளங்கள் விலை உயர்வை குறைக்கக்கோரியும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 150 டிப்பர் லாரிகள் அணிவகுத்து வந்தன. அவற்றுக்கு முன்னால், டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து லாரிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டன.


பின்னர் தேனி மாவட்ட வைகை டிராக்டர், டிப்பர், ஜே.சி.பி. உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜா, செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர், அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-


தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராவல் குவாரிகள், செங்கல் சூளை, மண் குவாரிகள், எம்-சாண்ட், கிரசர், ஜல்லி கற்கள் குவாரிகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு கனிம வளங்கள் விற்கப்படுகிறது. குறைவான அனுப்புகை சீட்டுகளை பெற்று செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.


இதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள எம்-சாண்ட் நிறுவனங்கள் கேரளாவில் இருந்து வரும் 200-க்கும் மேற்பட்ட கேரள பதிவு எண் கொண்ட லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக எம்-சாண்ட், ஜல்லி கற்கள் போன்ற கனிம வளங்களை கடத்திச் செல்ல உடந்தையாக உள்ளன. அதிக விலை கொடுத்து கேரள டிப்பர் லாரிகளில் எடுத்துச் செல்வதால் தேனி மாவட்டத்தில் கட்டுமான தேவைக்கு எம்-சாண்ட், ஜல்லி விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.


எனவே கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை தடுக்க வேண்டும். கரம்பை மண், தவுட்டு மண் போன்றவை கொள்ளை லாபத்தில் விற்கப்படுவதால் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்படுகின்றனர்.


சிலர் அரசு அனுப்புகை சீட்டை திருத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு ஆவணத்தை திருத்தும் குவாரி உரிமையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து, விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad