தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே உள்ள கானாவிலக்கில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது . அடுத்த மாதம் 12ஆம் தேதி செவிலியர்களின் தாய் என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்ததினம் வருகிறது .அந்த நாளை செவிலியர்கள் தினமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செவிலியர்கள் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம், இந்நிலையில் அடுத்த மாதம் வர உள்ள செவிலியர் தினத்திற்காக அவரது சிலையை செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகளின் குடியிருப்புக்கு அருகே நிறுவ இங்கு பணிபுரியும் அரசு மருத்துவர் முயற்சித்து அதற்கான பூமி பூஜை கடந்த வாரம் போட்டதாகவும் இப்பணிக்காக ஒவ்வொரு செவிலியரிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் கட்டாய வசூல் செய்ததாகவும் தேனி அரசு மருத்துவ செவிலிய கண்காணிப்பாளர் ஜோஸ்மின் ஜென்னி மீது புகார் எழுந்தது.
இதையடுத்து இந்து எழுச்சி முன்னணி சார்பில் இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன, இதையடுத்து போராட்டம் நடத்த முயன்ற இந்து எழுச்சி முண்ணனி நிர்வாகிகளை அழைத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பாலாஜிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த வாரம் தான் ஊரில் இல்லாத சமயத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் சிலை வைக்க பூமிபூஜை நடைபெற்றதாகவும் இதுகுறித்து வந்த புகாரால் தகவல் தெரிந்ததை அடுத்து உடனடியாக பணிகளை நிறுத்தியதாகவும், அரசின் உரிய அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது என்றும் வருங்காலத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எந்த சிலையை வைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் கூறிய அவர் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் இதையடுத்து இன்று இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment