தேனி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,சமுக நலத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.114.21 கோடி மதிப்பிலான 40 முடிவுற்ற திட்டப்பணிகளின் தொடக்கம் மற்றும் 74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 71.4 கோடி மதிப்பில் 10 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
தேனி உஞ்சாம்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்புரை ஆற்றி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது:
மேற்குத் தொடர்ச்சி மலைகள் நிறைந்த தேனி மாவட்டத்திற்கு தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, அணை என்றால் வைகை அணை. மலை என்றால் மேகமலை, அருவி என்றால் சுருளி அருவி என தேனி மாவட்டத்தின் சிறப்புகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர், நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியை பார்க்கும்போது பேரறிஞர் அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது நினைவுக்கு வருகிறது என்றார், தொடர்ந்து பேசிய முதல்வர்.,
- தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய் மதிப்பிலும் தரம் உயர்த்தப்படும் என்றார்.
- உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பிலும் தரம் உயர்த்தப்படும் என்றார்.
- ஆண்டிப்பட்டி ஜவுளி பூங்கா செயல்படுத்தப்படும், கம்பம் பகுதியில் உயர்தர நவீன அரிசி ஆலை நிறுவப்படும்,
- போடிநாயக்கனூர் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் 3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும்,
- கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி பேருந்து நிலையம் 7 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதி, பிரதமர் குடியிருப்பு திட்டம், பழங்குடி மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கான நிதி உதவி, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மகளிர்களுக்கான நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், தையல் இயந்திரங்கள் என பல்வேறு துறைகளின் கீழ் 71 கோடி மதிப்பில் 10,427 நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment