வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட தார் ரோடு பணி, பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட தார் ரோடு பணி, பொதுமக்கள் அவதி.

கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு முதல் வாலிப்பாறை வரை  9 கி.மீட்டர் தூரம் உள்ளது.  இந்த ரோடு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 


இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை மூலமாக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் தார் ரோடு போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தார் ரோடு பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முடிக்கப்பட்டது. இதில் வருஷநாடு காவல் நிலையம் முதல் மொட்டைப்பாறை ஏற்றம் வரையும், உருட்டி மேடு முதல் மணலாத்துக் குடிசை வரையும், கோமாளி குடிசை முதல் தும்மக்குண்டு  வரையும் சுமார் 4  கிலோ மீட்டர் தூரம் ரோடு போட வனத்துறையினர்  தடை விதித்து, ரோடு போட விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் தற்போது ரோடு குண்டும் குழியுமாகவும், சல்லி கற்கள் பெயர்ந்தும், ரோடுகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 


மேலும் இந்த ரோட்டின் வழியாகச்  செல்லக் கூடிய முருக்கோடை, காமராஜபுரம், ராயக்கோட்டை, வாலிப்பாறை, தும்மக்குண்டு, வண்டியூர் , காந்திகிராமம் உள்ளிட்ட கிராம பொதுமக்களும்  பெரிதும் சிரமப்படுகின்றனர். வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட தார்ரோடு பணியினை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


- தமிழக குரல் செய்திகளுக்காக வருசநாடு செய்தியாளர் செந்தில்.

No comments:

Post a Comment

Post Top Ad