பி.இ பட்டதாரியான கோபிநாத் சிவகங்கையில் படித்தபோது அனைத்து வீரர்களும் பங்கேற்கும் கிரிக்கெட்டில் வேகப்பந்து மற்றும் ஆல்ரவுண்டர்பிரிவில் பங்கேற்று அசத்தினார். மேலும் பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டியில் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வெற்றியையும் தேடித்தந்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேசன் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு தென்னிந்திய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்ற போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் புதுச்சேரி அணியுடன் மோதிய தமிழக அணி வெற்றிபெற்றது. இதில் சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் மும்பையில் நடந்த தேசிய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அணிகள் மோதின. அந்த போட்டியிலும் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. மேலும் கோபிநாத் அந்த தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி வீரர்களை திணறடித்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் சிறந்து விளங்குகிறார்.
இதனையடுத்து இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக வருகிற 3ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற உள்ள இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் பிரீடம் டிராபி போட்டியில் இந்திய அணி சார்பில் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கோபிநாத் தெரிவிக்கையில், கடுமையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் எட்டலாம். உலக கோப்பையில் பங்கேற்று விளையாடுவதே எனது லட்சியமாக உள்ளது. எனது இந்த வளர்ச்சிக்கு எனது குடும்பத்தினர், அணியின் கேப்டன் மற்றும் சகவீரர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்தார்.
- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன்
No comments:
Post a Comment