சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்களாறு ஆகிய 7 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 8000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பான்மையோர் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனர்.
இந்த மலை கிராமங்களுக்கு சின்னமனூர் முதல் இரவங்களாறு வரை 52 கிலோமீட்டர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான இச்சாலை சீரமைக்கப்படாமல் காணப்பட்டது இது சம்பந்தமாக பகுதியைச் சேர்ந்த மலை கிராமத்தினர் பலகட்ட போராட்டத்திற்கு பின் சாலை அமைக்கும் பணி ரூ.100.67 கோடியில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றன.
இதில் இரண்டாம் கட்டமாக மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்களாறு ஆகிய நான்கு கிராமங்களுக்கு சாலை பணிகள் நடைபெற்ற போது சின்னமனூர் வன சரக அதிகாரிகள் இப்பகுதி புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டதால் சாலை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாக முதல் வனத்துறை வரை பல்வேறு புகார்கள் அளித்தும் சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறிவிப்பு செய்தனர். இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன் சின்னமனூர் காவல் நிலையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையினர் தொடர்ந்து மறுத்ததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர் அதன்படி இன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் மணலாறு கிராமத்திலிருந்து ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர் . அப்போது இடையே வழிமறித்து ஊர்வலமாக சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேருந்தில் செல்லுமாறு வலியுறுத்தியதால் பேருந்தில் சென்றனர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை பணிக்கு இடையூறு செய்வதாக வனத்துறையை கண்டித்தும், பி .எஸ் .என். எல் தொலைத்தொடர்பு சேவையை முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹெச் .எம் .எஸ் தொழிற்சங்க தலைவர் முத்தையா தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், 7 மலைக்கிராம தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment