ஆண்டிபட்டி பகுதியில் ஏத்தக்கோவில் தெப்பம்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 18கண்மாய்களும் 150 சிறுகுளங்களும் வறட்ச்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதைப்போக்க முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து கண்மாய்களில் நிரப்பி பாசனவசதி அளிக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர் .
ஒவ்வொரு முறை தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக வைத்து ஐந்து முறை வெற்றி பெற்ற திமுக அரசு இத்திட்டத்தை தற்போது வரை நிறைவேற்ற வில்லை. அதே போல் கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போதும் இதே கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக வைத்தது திமுக . கடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தற்போதைய முதல்வரான மு.க ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையிலேயே முல்லைப் பெரியாறு நீரை ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு கொண்டு வருவேன் என தேர்தல் வாக்குறுதியையும் அளித்தார் .
ஆனால் ஆட்சி பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை திட்டத்தை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்நிலையில் இன்று அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை எதிரில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது, இந்த போராட்டத்திற்கு ஆண்டிபட்டி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் .
இந்த தொடர் முழக்க போராட்டத்தில் 50 ஆண்டுகால கோரிக்கையான முல்லை பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டுவந்து பாசனவசதி அளிக்க வேண்டும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment