கம்பத்தில் கபளீகரம் செய்யும் அரிக்கொம்பன் ஒற்றை யானை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

கம்பத்தில் கபளீகரம் செய்யும் அரிக்கொம்பன் ஒற்றை யானை.


தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த  ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்” என்னும் ஒற்றை காட்டுயானை இன்று (27.05.2023)  அதிகாலை 05.00 மணியளவில் கம்பம், ‘ஹார்வெஸ்ட் பிரஷ் பார்ம்  ஸ்டே ரிசார்டில்” அருகில் இருந்து,  பின்னர் கம்பம் நகரத்திற்குள்  நுழைந்தது.    

    
கம்பம் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வரும் வழியில் வனத்துறையினரின் வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மேலும், யானையினை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம், ஆசாரியார் தெருவைச் சேர்ந்த திரு.சடையாண்டி மகன் பால்ராஜ் என்பவரை தாக்கியதில் காயம் ஏற்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தற்போது, யானையானது கம்பம் பைபாஸ் சாலைக்கு அருகில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ளது.  இப்பகுதியானது கம்பம் நகருக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும்.  மேலும், அரிக்கொம்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்திட தேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் யானையினை பிடிக்க இரண்டு கும்கி யானைகளும் கொண்டு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நேர்வில், அரிக்கொம்பன் யானையினை பிடிக்க ஏதுவாக, அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், அரிக்கொம்பன் யானையானது  பொதுமக்களை தாக்காமல் இருக்க கம்பம் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எனவே, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அரிக்கொம்பன் யானை செல்லும் பாதையில் எவ்வித இடையூறு செய்யாமல் இருக்குமாறும், புகைப்படம் மற்றும் வீடியோ ஏதும் எடுக்க யானையின் அருகில் செல்வதை தவிர்க்குமாறும்  யானையினைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடப்படும் வரை பொதுமக்கள் தக்க ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், அரிக்கொம்பன் யானையினை பிடித்து வனப்பகுதிக்குள் விடப்பட்ட பின்னர் 144 தடை உத்தரவானது முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும் என்ற விவரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ஆர்.வி.ஷஜீவனா,  இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad