1972-ஆம் ஆண்டு ஸ்வீடன் தலைநகரான ஸ்ரெக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ”மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும்” என் வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டு, மாநாட்டின் முடிவில் ஜீன் 5-ம் தேதியினை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்துத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஜீன் 5-ம் நாள், உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி கடந்த ஆண்டு சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டிபட்டி பேரூராட்சிக்கும், பசுமை போர்வை அதிகரிக்க அதிகளவில் களப்பணி ஆற்றிய சோலைக்குள் கூடல் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1,00,000/-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், நமது அன்றாட வாழ்வில் முடிந்தவரையில் ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்குமாறும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுரை வழங்கினார். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பர எல்.இ.டி.திரையினை திறந்து வைத்தார். முன்னதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மேனகா மில்ஸ் நிறுவனத்தின் சார்பில், தப்புக்குண்டு பகுதியில் 515 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி மதுமதி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் திருமதி சர்மிளி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.பழனிச்சாமி, வனச்சரகர் திரு.செந்தில்குமார், தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திரு.சக்கரவர்த்தி, ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி சந்திரகலா, நிர்வாக இயக்குநர் திரு.என்.ஆர்.மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment