தேனிக்கே முன்னோடியான பெரியகுளம் நகர் தற்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் அவல நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவது வேதனை மிகுந்த செயலாக உள்ளது. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு மாவட்ட அலுவலகங்கள் இருந்து செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்த பொழுது, முக்கிய நகரமாக பெரியகுளம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த கால தி மு க ஆட்சியில் பெரியகுளம் மாவட்டமாக அறிவிப்பார்கள் என்றிருந்த நிலையில் அவை மாற்றப்பட்டு தேனியை மாவட்டமாக அறிவிப்பு செய்து இங்கு செயல்பட்டு வந்த பல் துறை அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டு தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது பெரியகுளம் பகுதியில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த பத்திரப்பதிவு அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களை வஞ்சிக்காமல் பெரியகுளம் பகுதியிலேயே மீண்டும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரியகுளம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீரிலும் பொதுமக்களை வஞ்சித்து இந்த அரசு செயல்பட்டு வந்துள்ளது இப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும்.
மேலும் பெரியகுளம் பகுதியில் பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், (DEO அலுவலகம்) செயல்பட்டு வந்தது. அவையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டு அவையும் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது, ஏற்கனவே வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதி மன்றம், பிஎஸ்என்எல் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, மாவட்ட கல்வி அலுவலகம், Labour office, தற்போது மாவட்ட பதிவாளர் அலுவலகம், உள்ளிட்டவைகளை பிரித்துச் சென்று கைம்பெண்ணாக தற்போது பெரியகுளம் உள்ளது.
இன்னும் எஞ்சியுள்ள மாவட்ட இணை இயக்குநர் அலுவலகத்தையும் (மருத்துவம், ஊரகம் மற்றும் குடும்ப நல அலுவலகத்தையும்) மாற்றி விட்டு மதுரைக்கு அடுத்தபடியாக உயர்தர சிகிச்சை அளித்து வந்த பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை மாற்றி ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இல்லாத பகுதி என்றால் அது பெரியகுளம் தான். தனது ஆதரவாளரின் மாங்காய் கடையில் எம்எல்ஏ அலுவலகம் செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயம் ஆகும். இதுபோன்று அரசு அலுவலகங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் பெரியகுளம் பகுதியில் இருந்து ஒவ்வொன்றாக செல்வது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான்.
இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல, மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருவதை அனைத்து மக்களும் உணர்ந்து வருகின்றனர்... இவற்றிற்கெல்லாம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இந்த மக்கள் விரோத அரசிற்கு பதிலடி கொடுப்பார்கள் என ஓ.சண்முகசுந்தரம் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment