போதை பொருள் கடத்தல் கும்பல்......அலெக்கா தூக்கிய பெரியகுளம் இன்ஸ்பெக்டர்"பாஸ்டின் தினகரன்"
பெரியகுளத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கக் கூடிய போதைப் பொருள்கள் கடத்தல்: இரண்டு கார்கள் உட்பட ஆறுபேர் கைது.. முக்கிய குற்றவாளிகளை தேடி தனிப்படை விரைவு :
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கேரள பதிவேடு கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அந்த வாகனத்தில் கொடைக்கானலைச் சேர்ந்த ஆரிப் என்பவர் கஞ்சா மற்றும் விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்த பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ,கஞ்சா, மெத்தபெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆரிப் என்பவரை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
ஆரிப் என்பவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு துணையான ஆரிப் ன் கூட்டாளிகளான விகாஷ் ஷியாம் ,ராம்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் இன்னும் சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில்,பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சூரகுமரன் வழிகாட்டுதலின் படி பெரியகுளம் போலீசார் தனிப்படை அமைத்து போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய தேனியைச் சேர்ந்த ஆனந்த் , ஈரோடு யாசர், கோவையைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய மூன்று பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரினை பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையம் கொண்டு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 5 பேரையும் இன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர் . கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மெத்த பெட்டமைன் 50 கிராம், கஞ்சா 250 கிராம், எல்எஸ்டி ஸ்டாம்பு 1 கிராம் , கொக்கைன் 1 கிராம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .
மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கேரளாவைச் சேர்ந்த நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சர்வதேச சந்தையில் கிடைக்கக் கூடிய போதைப் பொருட்கள் கடத்தி வந்த கடத்தல்காரர்கள் பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துரிதமாக செயல்பட்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் துறைக்கும், பெரியகுளம் போலீசாருக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment