ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக வெளிநடப்பு
ஆண்டிபட்டி, ஆக. 02, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த லோகிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் அதிமுகவை சேர்ந்த வரதராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வாசித்துக் கொண்டிருக்கும் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினரான காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் என்பவர் தெரிவிக்கையில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த ஆறு மாத காலமாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் மற்றும் மாநில ஆணையருக்கு புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் கடந்த 26ம் தேதி கோட்டாட்சியர் முத்து மாதவன் தலைமையில் விசாரணை நடத்துவதாக கூறி அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களையும் வரவழைத்து, அங்கு விசாரணை செய்யாமல் திடீரென நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது என்றும் கோட்டாட்சியர் ஒரு தலை பட்சமாக செயல்பட்டு இந்த விசாரணை கூட்டத்தை முடித்து வைத்தார். இதனை கண்டித்தும், கோட்டாட்சியர் நடவடிக்கைகளை கண்டித்தும், இன்று நடைபெற்ற முறையற்ற கூட்டத்தை கண்டித்தும் 5 திமுக ஒன்றிய கவுன்சிலர்களும் 1 காங்கிரஸ் கவுன்சிலரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்று தெரிவித்தனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment