ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்கித்தர வலியுறுத்தி வைகை ஆட்டோ சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை செல்லும் ரோடு சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் சிலர் கடைகளை அமைத்தனர். சைக்கிள், தள்ளு வண்டிகளில் கடைகள் அதிகமானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டையும் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக தெரிவித்து வைகை ஆட்டோ சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அப்பகுதியில் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்க வலியுறுத்தினர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலாவதி, ராமசாமி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment